Friday, October 1, 2010

கவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை.

மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் இவ்வாறான வரிகளை எழுதியுள்ளார்.

தனக்கு துர்போதனை செய்த மந்தரையின் வார்த்தைகளை கேகயன் புதல்வியான கைகேயி உடனே ஏற்றுக் கொண்டுவிடவில்லை. மந்தரையை பார்த்து அவள் சினத்துடன் கூறும் வரிகளை கம்பன் வாய்மொழியில் பார்ப்போம்:

வாய் கயப்புற மாந்தரை வழங்கிய வெஞ் சொல்,
காய் தனல்தலை நெய் சொரிந்தென, கதம் கனற்ற,
கேகயர்க்கு இறை திருமகள், கிளர் இள வரிகள்
தோய், கயல் கண்கள் சிவப்புற நோக்கினள், சொல்லும்;

வெயில் முறைக் குலக் கதிரவன் முதலிய மேலோர்,
உயிர் முதல் பொருள் திறம்பினும், உரை திறம்பாதோர்;
மயில் முறைக் குலத்து உரிமையை, மனு முதல் மரபை;
செயிர் உற, புலைச் சிந்தையால், என் சொனாய்? - தீயோய்!


பிறகு மந்திரை தன் நோக்கத்தில் வெற்றியடைந்து ராமாயணத்தை மேற்கொண்டு நகர்த்துவது இப்பதிவில் வராது. அது பற்றி பிறகு பார்ப்போம்.

"மயில் முறைக் குலத்துரிமை" பற்றி மந்தரை சூழ்ச்சிப் படலத்தில் கம்பர் பாடியதற்குப் பல வித விளக்கங்கள் கூறுவர். நாமக்கல் கவிஞர் முதலில் தான் படித்த கம்பராமாயண உரைநூலில் மயில் முட்டைகளில் முதலில் உருவான முட்டை முதலில் குஞ்சாக பொரியும், பிறகுதான் அடுத்து உருவான முட்டைகள் பொரியும், அதுபோல மூத்தவனுக்கே அரசுரிமை என்பதாக விளக்கம் தரப்பட்டிருந்ததை கண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு குழப்பம் என்னவென்றால், இது எல்லா பறவைகளின் முட்டைகளுக்குமே பொருந்துமே, மயில் என்ன ஸ்பெஷல் இதில் என்பதே.

எதேச்சையாக ஒரு நாள் அவர் 'ஸயண்டிபிக் அமரிக்கன்' என்ற பத்திரிக்கையில்
ஒரு விளக்கம் கண்டார். அது பின்வறுமாறு:
மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும்.
இவ்வாறு மயில்களைப் பற்றிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்ததைக் கண்டார் நாமக்கல் கவிஞர்.

இதைக் கண்டுபிடிக்க மயில் குஞ்சு பொரித்தவுடன் ஒவ்வொரு குஞ்சுக்கும் ஒரு வளையம்
விதம் விதமான வண்ணத்தில் காலில் மாட்டிவிடப்பட்டதாம். அதிலிருந்தே மூத்த மயில் அடையாளம்
அறியப்பட்டது என்றும் அந்த கட்டுரையில் கூறப்பட்டிருந்தது.

மயிலிடம் உள்ள இந்தத் தனிவிசேடத்தைத்தான் கம்பர் பாடியிருக்கிறார்’ மன மாற்றம் ஏற்படும் முன் கைகேயி, ராமனுக்கு முடி சூடிவிடவேண்டியது முறை எனக் கூனிக்கு உணர்த்தும் அப்பாட்டில் என்பதை அவர் உணர்ந்தார்.

அதன் பிறகு பல காலம் இதை வைத்தே அவர் பலரை அசத்தி வந்திருக்கிறார். வேண்டுமென்றே பேச்சை கம்பர் பக்கம் திருப்ப வேண்டியது, பிறகு இந்த குறிப்பிட்ட பாடலை கூறி, மயில் இதில் எங்கே வந்தது என கேட்பது, அவர்களை சிறிது நேரம் அலையவிட்டு பிறகு சயண்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில் வந்ததைக் கூறுவது என்றிருந்திருக்கிறார். ஆனால் இதிலும் முழு உண்மையை கூறமாட்டார். அதாகப்பட்டட்து மற்றவர்கள் இதை அவர் எங்கிருந்து கற்றார் எனக்கேட்டால், பறவை சாஸ்திரம் தெரிந்தவர்களுக்குத்தன் இந்த விஷயம் தெரியும் என பூடகமாக கூறிவிடுவார். மறந்தும் சயண்டிஃபிக் அமெரிக்கன் கட்டுரை பற்றி கூறமாட்டார்.

இவ்வாறு சில ஆண்டுகள் சென்றன. ஒரு வயதான தமிழ்ப்புலவரை பார்த்திருக்கிறார். அவரிடம் இக்கதையை எடுத்து விட்டு விளக்கம் கேட்டிருக்கிறார். அவரோ சர்வ சாதாரணமாக, “ஓ, அதுவா, மயிலானது தன்னுடைய எல்லாக் குஞ்சுகளுடனும் குடும்ப சகிதமாகத்தான் ஓர் இடத்திலிருந்து
இன்னோர் இடம் போகும். அப்படி மயில் குஞ்சுகளுடன் சேர்ந்திருக்கும் போது, குஞ்சுகளின் மூத்தது
தான் தோகைவிரித்து ஆடத் தொடங்கும். அதன் பிறகே மற்றக்குஞ்சுகள் தோகை விரிக்கும். கம்பர் இதைத்தான் தனது பாடலில் சுட்டியுள்ளார்” எனச் சொல்ல, இவருக்கு மூச்சே நின்றுவிட்டதாம். முகத்தில் ஏதோ கரி பூசியது போலவும், மூக்கு நுனி சற்றே பங்கப்பட்டது போலவும் பிரமையாம். அப்புலவர் ஆங்கிலம் அறியாதவர், அவராவது சயண்டிஃபிக் அமெரிக்கன் இதழை பார்த்திருப்பதாவது என்றெல்லாம் மனம் மயங்கியுள்ளார். பிறகு அவரிடமே மேலும் விளக்கம் கேட்க, அவர் சர்வ இயல்பாக ஒரு தமிழ் இலக்கிய படைப்பின் பெயரைக் கூறி விட்டு அதில் இன்ன இடத்தில் இன்ன செய்யுளில் இந்த சேதி உள்ளது எனக் கூறிச் சென்றார்.

துரதிர்ஷ்டவசமாக ராமலிங்கம் பிள்ளை அவர்கள் அந்த சுட்டியின் விவரங்களை குறித்து வைத்துக் கொள்ள தவறிவிட்டார். பிறகு எவ்வளவு முயன்றும் அவருக்கு அது கிடைக்கவில்லை. போகும் இடமெல்லாம் இது பற்றி கேட்டிருக்கிறார். ஆனால் இம்முறை மரியாதையாக சயண்டிஃபிக் அமெரிக்கன் விஷயங்களையும் வெளிப்படையாக கூறி, தமிழ்ப்புலவர் தன்னை கர்வபங்கம் செய்ததையும் சொல்லி யாருக்கேனும் மயில் முறை குலத்துரிமை எந்த நூலில் எந்த இடத்தில் வருகிறது என்பது பற்றி தெரியுமா என கேட்டிருக்கிறார். இவ்வாறு இக்கேகேள்வியுடனேயே அவர் பல ஆண்டுகள் மேலும் தேடியிருக்கிறார்.

ஒரு நாள் திடீரென அவருக்கு ஒரு முதல் நிலை தமிழ் மாணவனிடமிருந்து கடிதம் வந்தது. அதில் பலான நூலில் பலான செய்யுள் எண்ணில் அவர் கேட்ட தகவல் இருக்கிறது என காணப்பட்டிருந்ததாம்.

ஆக, பல ஆண்டுகள் பெரிய பயணம் நடந்த உணர்வுடன் அவர் இவ்வாறு கூறி முடிக்கிறார், “இவ்வாறுதான் நான் உணர்ந்தேன், கற்றது கைம்மண்ணளவு என்று” என.

இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வரிகள். வெ. ராமலிங்கம் பிள்ளையின் இது குறித்த கட்டுரையை நான் கலைமகள் கதம்பத்தில் படித்ததாக நினைவு. அதே சமயம் கடைசியில் குறிப்பிடப்பட்டுள்ள நூலின் பெயர் என்ன என்பதையும் மறந்து விட்டேன். யாராவது தெரிஞ்சால் சொல்லுங்கப்பு.

No comments:

Post a Comment